தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று சொல்லி தமிழக ஆளுநரிடம் தங்களின் ஆதரவு விலகல் கடிதத்தை கொடுத்த 18 தினகரன் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை,சபாநாயகர் தனபால், கட்சி தாவி விட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக சட்டபேரவை செயலாளர் திரு பூபதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இந்திய அரசமைப்புச் சட்டம், 10வது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர் கீழ்க்காணும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டார்கள்.

அவர்கள் பெயர் மற்றும் தொகுதிகள் வருமாறு:-

தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), ஆர்.முருகன் (அரூர்),சோ.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), டாக்டர் கே.கதிர்காமு (பெரியகுளம்),சி.ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்),பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி),எஸ்.முத்தையா (பரமக்குடி), வெற்றிவேல் (பெரம்பூர்),என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்),மு.கோதண்டபாணி (திருப்போரூர்),டி.ஏழுமலை (பூந்தமல்லி),எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை),ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்),எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்),ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்), கே.உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்) என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்போது குடகு மலைப்பகுதியில் உள்ள ரிஸார்ட்டில் தங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்