மக்களுக்கு சேவை செய்பவர்கள் கட்டவுட் மூலமாக தமது பெருமைகளை வெளிப்படுத்துகின்றனர், இன்று அமைச்சர் திகாம்பரம் மலையக தோட்ட மக்களுக்கு தனி வீடுகளை திட்டங்களை உருவாக்கி திறந்து வைத்து வருகின்றார், ஆனால் அவர் கட்டவுட்களை வைத்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை, என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

மலையகத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் முதலானவற்றை அகற்றி, சமூகத்தில் பலம் மிக்க அமைப்பொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்தில் “திகா மன்றம்” எனும் புதிய அமைப்பொன்று, “ஒரு புதிய மாற்றத்துக்கான ஆரம்பம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஹரின் மேலும் கூறியதாவது,

"செந்தில் தொண்டமான் என்பவர் தானே சிறந்த ஹீரோ என கற்பனை வளர்த்துக் கொண்டு செய்யும் சேவைகளை கட்டவுட் மூலமாக அடையாளப்படுத்துகின்றார்.  இன்று திகாம்பரத்தினால் கட்டப்படும் தனி வீட்டு திட்டம் கடந்த அரசாங்க காலத்தில் செந்தில் தொண்டமான் கட்டியிருந்தால் வீடுகளை விட கட்டவுட்களே அதிகமாக காணப்பட்டிருக்கும்,

சிங்க முகத்துடன் கருப்பு கண்ணாடி அணிந்து காட்சியளிக்கும் திகாம்பரமும் ஒரு கமலஹாசன் தான். ஆனால் இவர் செய்யும் சேவைகளுக்கு தன்னை நடிகர் போல் அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார் என்பதை பெருமையுடன் தெரிவிக்கின்றேன்,

மலையக மக்களுக்கு சேவை செய்வதில் நல்ல நெஞ்சம் உள்ளவராக  இவர் இருக்கின்றார், எதிர்காலத்தில் திகா மன்றத்தின் ஊடாக நீண்டதோர் இலக்கை நோக்கி செல்லும் இவருக்கு நானும் உதவுவேன், மக்களுக்காக ஒன்றரை இலட்சம் வீடுகளை கட்ட விசேட திட்டங்களை பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இவருக்கு  வழங்கி வருகின்றனர், இதற்காக நாமும் உதவுவோம்,

நாடாளவீய ரீதியில் எனது அமைச்சின் ஊடாக டிஜிட்டல், தொலைத்தொடர்பு வசதிக்காக கிராம பகுதிகள் நகர் பகுதிகளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் மலையக பிரதேச தோட்டப்பகுதிகளுக்கும் இவ் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படும்,

தோட்ட மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு சென்ற பலர் இம்மக்களை மறந்து விடுகின்றனர், ஆனால் திகாம்பரம் அவ்வாறல்ல, மலையகத்தில் லயத்து வீட்டில் வாழ்கின்றவர்களை தனி வீட்டுக்கு அழைத்து வருகின்றார்.

மலையக மக்களுக்கு துரோகம் செய்யும் தலைவர்களை மக்கள் ஓரங்கட்ட வேண்டும், வாழ்க தமிழ் மக்கள்" என தனது உரையில் தெரிவித்தார்.