சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தற்காலிகமாகத் தடை செய்திருக்கும் அரசின் நிலைப்பாட்டை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.

சைட்டம் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக அரசு நியமித்திருக்கும் ஆணைக்குழுத் தலைவரான பிரதி சுகாதார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, மருத்துவக் கல்வி வழங்குவதற்கான குறைந்தபட்ச தராதரங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும்வரை சைட்டம் தனியார் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர்கள் அமைப்பும், மேற்படி ஆணைக்குழு தற்காலிகத் தீர்வுகளைத் தரும் முடிவுகளையே எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

“பல்கலைக்கழக பாட விதானத் தலைவர்கள் பரிந்துரைத்திருக்கும் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமே சைட்டம் விவகாரத்தை நிரந்தரத் தீர்வு நோக்கி எடுத்துச் செல்ல முடியும்” என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.