துனீஷியப் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆண்களை மணப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

அரேபிய நாடுகளில் பெண்களின் உரிமைகளை அதிகளவு வழங்கியிருக்கும் நாடு துனீஷியா. 99 சதவீத முஸ்லிம் மக்களைக் கொண்டிருக்கும் இந்த நாட்டில், முஸ்லிம் அல்லாத ஆண் ஒருவர் முஸ்லிம் பெண்ணை மணக்க விரும்பினால் அவர் இஸ்லாத்தைத் தழுவுவதோடு, அதை தக்க சான்றுகளுடன் உறுதிப்படுத்த வேண்டும் என்ற சட்டம் அமுலில் இருந்தது.

இந்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் 1973ஆம் ஆண்டு முதல் எழுந்திருந்தன. இதில் மனித உரிமை அமைப்புகளும் பெரும்பங்கு வகித்திருந்தன.

இந்த நிலையில், கடந்த மாதம் துனீஷியாவின் தேசியப் பெண்கள் தினத்தன்று மக்கள் முன்னிலையில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி பேஜி கெய்ட் எஸ்ஸெப்ஸி, பெண்கள் தமது துணையைத் தேடுவதற்கான சுதந்திரத்தை மேற்படி சட்டம் தடை செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, அந்தச் சட்டத்தை இன்று முதல் இரத்துச் செய்து உத்தரவிட்டிருப்பதாகவும், இதன்மூலம் முஸ்லிம் பெண்கள் எந்தச் சமயத்தைச் சேர்ந்த ஆணையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் அந்நாட்டரசு தெரிவித்துள்ளது.