வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த  1800 ஆலயங்களுக்கு 240 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு இந்துக்கலாசார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சைவ பரிபாலன சபை நடாத்தும் சைவ மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எனது அமைச்சின் மூலம் இந்த இரண்டு வருடங்களுக்குள் நாங்கள் வட கிழக்கு மாகாணங்களை சேர்ந்த  1800 ஆலயங்களுக்கு பண உதவிகளை வழங்கியுள்ளோம்,என்னிடம் நிதிகேட்ட எல்லா ஆலயத்திற்கும் என்னுடைய அமைச்சின் மூலம் நிதி உதவிகளை வழங்கியுள்ளேன்,  இன்னும் கோவில்கள் இருந்தால் எனக்கு அறிவிக்கும் பட்சத்தில் பணத்தினை கொடுத்து கோவில்களின் முன்னேற்றத்துக்கு உதவுவேன்" என தெரிவித்தார்

சைவ பரிபாலன சபை நடாத்தும் சைவ மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியது.யாழ் வண்ணார் பண்ணை சிவன் கோவிலில் இடம்பெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து மாநாட்டு ஊர்வலம் காங்கேசன்துறை வீதியூடாகச் சொன்று கல்லூரி வீதிவழியாக நிகழ்வு இடம்பெறும் நாவலர் ஆச்சிரம மண்டபத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்வு தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கை அம்மன் தேவஸ்தனத் தலைவர் திரு.ஆறுதிருமுருகன் தலைமையில் ஆரம்பமாகியது. இம் மாநாடு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.