இஸ்லாமிய சமயத்தை நிந்திக்கும் கவிதையொன்றை வட்ஸ்அப்பில் அனுப்பிய பாகிஸ்தான்வாழ் கிறிஸ்தவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நதீம் ஜேம்ஸ் என்ற கிறிஸ்தவர், கடந்த வருடம் ஜூலை மாதம் தனது இஸ்லாமிய நண்பரான யாஸீர் பஷீருக்கு வட்ஸ்அப்பில் கவிதையொன்றை அனுப்பியிருந்தார். 

அந்தக் கவிதை இஸ்லாம் சமயத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் நபிகள் நாயகம் உட்பட இஸ்லாத்தின் பெருமதிப்புக்குரிய பலரையும் நிந்திக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் கூறி பஷீர் பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (14) வழங்கப்பட்டது. அதில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஜேம்ஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் ஜேம்ஸ் தரப்பில் வாதாடிய சட்டத்தரணி, ஜேம்ஸ் ஒரு முஸ்லிம் பெண்ணை விரும்பியதாகவும், அதைக் கடுமையாக எதிர்த்த பஷீரின் பழிவாங்கும் முயற்சியே இது என்றும் கூறினார்.

மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜேம்ஸ் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜேம்ஸின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றில் நடத்தப்படாமல், சிறைச்சாலையின் அறை ஒன்றினுள்ளேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.