இலங்கை அரசியல் வரலாற்றில் புது வரலாற்றை உருவாக்கிய மிக எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அழகிய கதையை அவரது மகளின் பார்வையால் கூறும் ”ஜனாதிபதி அப்பா” நூல் வெளியீட்டு விழா இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. 

தனது தந்தையார் பிரதேச அரசியல்வாதியாக அரசியல் வாழ்வை ஆரம்பித்து, ஜனாதிபதி பதவி வரையான முன்னேற்ற பயணத்தை மேற்கொண்டபோது அவரது மூத்த மகளாக சத்துரிக்கா சிறிசேன பெற்ற அனுபவங்களைப்பற்றியே  இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி வகிக்கும் தனது தந்தை தொடர்பில் மகளால் எழுதப்பட்ட முதலாவது வாழ்க்கைச் சரிதமாக இந்த நூல் வரலாற்றில் இடம்பெறுகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்பாராத பல சவால்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அந்த சவால்களை தாங்கிக்கொண்ட முறை தொடர்பில் சாதாரண மக்களுக்கு தெரிந்திராத பல தகவல்கள் மற்றும் மேல் மாகாணத்திலிருந்து வட மத்திய மாகாணத்துக்கு வாழச்சென்ற துணிச்சலான விவசாய குடும்பத்தின் உண்மையான வாழ்க்கைக் கதை இவ்வாறு இலக்கியமாக உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

நூலின் முதற் பிரதி சத்துரிக்கா சிறிசேனவால்  ஜனாதிபதியிடமும், அவரின் பாரியரான ஜயந்தி சிறிசேனவிடமும்  வழங்கப்பட்டது.

இரண்டாவது பிரதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது. 

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வியான துலாஞ்சலி பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜேவீரவின்  புதல்வியான ஈஷா விஜேவீர ஆகியோருக்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன. 

மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ஹேமா பிரேமதாஸ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.