அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் பயன்படுத்திய எயார் ஃபோர்ஸ் வன் விமானமே அருங்காட்சியகமாக உருமாறியுள்ளது.

அமெரிக்காவின் ரோட்ஸ் தீவின் க்வோன்செட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த பறக்கும் அருங்காட்சியகம், சிறுவர்களைக் கருத்திற்கொண்டே உருவாக்கப்பட்டதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் பன்னிரண்டு வருட முயற்சியின் பின் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

“வருங்காலத் தலைவர்களாக உருவாகவிருக்கும் சிறுவர்கள், ஒரு தலைவரின் கடமைகள் என்ன, அவருக்கு வழங்கப்படும் வசதிகள் என்ன என்பன குறித்து அறிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், அவர்கள் தமக்குள் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள். அதற்கு இந்த அருங்காட்சியகம் உதவும்” என்று இந்த அருங்காட்சியத்தின் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதிகளின் பயணத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுவது எயார் ஃபோர்ஸ் வன் என்ற போயிங் 747-8 ரக விமானம். இதில், வேறெந்த விமானத்திலும் இல்லாத பல வசதிகள் உண்டு.

மூன்று மாடிகளில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவுகொண் இவ்விமானத்தில், ஜனாதிபதி, அவரது செயலாளர், உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என 76 பேரும், விமானச் சிப்பந்திகளாக 26 பேருமாக 100க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கலாம். அனைவருக்கும் பிரத்தியேக தங்கும் அறைகள் உண்டு.

இயற்கை அனர்த்தம் மற்றும் ஏனைய அனைத்து ஆபத்துக்களையும் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு முகங்கொடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைகளை அடையாளம் காணும் ராடார்கள், மற்றைய ராடார்களில் இருந்து தப்பும் வசதி, இணையதளத் தாக்குதல்களைக் கண்டறியும் வசதி, நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, மின்காந்த அலைகள் ஊடுருவ முடியாத அமைப்பு, பாதுகாப்பான தொடர்பாடல் மற்றும் தகவல் பரிமாற்று வசதி, சத்திர சிகிச்சைகள் செய்யக்கூடிய வகையிலான மருத்துவ வசதிகள் உட்படப் பல வசதிகள் கொண்டது இந்த விமானம்.

தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள இந்த விமானம், எதிர்வரும் அக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்குக்குப் பறந்து செல்லவிருக்கிறது. அங்கு சில காலம் தங்கியிருந்தபின், வொஷிங்டனில் தரையிறங்கும். அதன்பின் நிரந்தரமாக வொஷிங்டனிலேயே பார்வையாளர்களுக்காக வைக்கப்படவுள்ளது.