விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் ஊடகவியலாளர் ஒருவர், அறுகம்பேயில் முதலை தாக்கி மரணமானார்.

பிரித்தானியாவின் சர்ரே பகுதியைச் சேர்ந்த போல் மெக்ளீன் (25) என்ற, ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரே இவ்வாறு பரிதாபமாக மரணமானார்.

நண்பர்களுடன் அறுகம்பே பகுதியில் உல்லாசமாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த இவர், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக பொருத்தமான இடம் தேடிச் சென்றிருக்கிறார்.

அப்போது, ‘முதலைக் குன்று’ என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் ஒதுங்கிய அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

இறுதியாக, நீரில் மூழ்கியபடி அவர் அபயம் கோரி தனது கைகளை ஆட்டினார் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்ளீனின் உடலைத் தேடும் நடவடிக்கையில் அப்பகுதி பொலிஸாரும் மீனவர்களும் இறங்கியுள்ளனர்.