உலகிலேயே முதன்முறையாக ‘ரோபோ’ ஒன்று, ‘ஓர்கெஸ்ட்ரா’ எனப்படும் மேற்கத்தேய இசை நிகழ்ச்சியின் நடத்துனராகக் களமிறங்கி இரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

சாய்ந்த கோபுரத்துக்குப் பெயர்போன இத்தாலியின் பைசா நகரில் அமைந்துள்ளது ‘வேர்டி தியேட்டர்.’ இந்த இசை அரங்கில் இசைப்பதை மாபெரும் இசை வல்லுனர்கள் ஒரு பெரும் பாக்கியமாகவே கருதுவார்கள்.

அவ்வளவு பிரபலமான இந்த இசையரங்கில், சுவிட்ஸர்லாந்தின் ரோபோ தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய ‘யூமீ’ (YuMe) என்ற ரோபோ ஒன்று இசை நடத்துனர் பணியைச் செய்து அசத்தியுள்ளது.

ரோபோ தயாரிப்பு நிறுவனங்களுக்கான சர்வதேச விழாவொன்றின் இறுதி நிகழ்வாகவே இந்த இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு அடங்கிய மாணவர்கள் போல், வாத்தியக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருக்க, இசை நடத்துனர்களின் கையில் இருக்கும் குச்சியை ஒரு கையில் ஏந்தியபடி, இசைக் கலைஞர்களை இசைக்க வைத்தது யூமீ!

யூமீயின் அசைவுகள் யாவும் பிரபல இசை நடத்துனரான அண்ட்ரியே கொலம்பினியின் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

இசைக் கலைஞர்களின் இயக்கத்தை தன்னிச்சையாக யூமீயால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ள இசைக் கோர்வைகளை வாத்தியக்காரர்கள் வாசிப்பதற்கு ஏற்ற அசைவுகளை யூமீயால் வழங்க முடியும் என்பதே அதன் சிறப்பம்சம்!