அமெரிக்காவின் டெக்ஸாஸ் மானிலத்தில், அண்மையில் வீசிய ஹார்வி புயலில், உயிரற்ற இராட்சத கடல்வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளது.

டெக்ஸாஸின் மத்திய நகரில் உள்ள கடற்கரையிலேயே கண்கள் அற்ற, கூர்மையான பற்கள் கொண்ட, நீண்ட உருளை போன்ற தோற்றம் கொண்ட, வால் பகுதி சிதைந்த இந்தக் கடல்வாழ் உயிரினம் ஒதுங்கியுள்ளது.

இதை முதன்முதலில் ப்ரீத்தி தேசாய் என்ற அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணே கண்டிருக்கிறார். 

“அது ஒரு நீர் நாய் (சீல்) என்றே நான் நினைத்திருந்தேன். எனினும் அருகில் சென்று பார்த்தபோது, இதுவரை நான் கண்டிராத, கேள்விப்பட்டும் இராத இந்த உயிரினத்தைக் கண்டேன். 

“இது என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் இந்த ஜந்துவின் புகைப்படத்தை ட்விட்டரில் தரவேற்றினேன். எனினும் இதுவரை உருப்படியான ஒரு தகவலும் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் ப்ரீத்தி!

இந்த வித்தியாசமான உயிரினம் விலாங்கு மீன் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்பட்டபோதும், இதுவரை உலகில் அடையாளம் காணப்பட்ட விலாங்கு இனங்களில் இதுபோன்ற உயிரினம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.