இந்தியாவின் முதல் ‘புல்லட்’ ரயிலுக்கான திட்டம், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயினால் குஜராத்தில் இன்று(14) ஆரம்பமானது.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜப்பானியப் பிரதமர் அபே, மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் இதற்கான அடிக்கல்லை நாட்டி இந்தத் திட்டத்தை சற்று முன்னர் ஆரம்பித்து வைத்தார்.

பதினேழு பில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான நிதியின் பெருந்தொகையை ஜப்பானே கடனாக வழங்கியுள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அஹமதாபாத் முதல் மும்பை வரையிலான 500 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று மணிநேரங்களில் சென்றடையலாம். தற்போது இதற்காக எட்டு மணி நேரத்தை பயணிகள் செலவிட வேண்டியுள்ளது.

இங்கு பேசிய ஜப்பானியப் பிரதமர், “அடுத்த முறை நான் இந்தியாவுக்கு வருகை தரும்போது, புல்லட் ரயிலில் பயணித்தபடியே இந்தியாவின் பசுமை நிறைந்த அழகுக் காட்சிகளைக் கண்டு இரசிக்க முடியும் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.