யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related image

குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த படுகொலை சம்பவம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர், மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, 

இந்த சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கடந்த 11 மாதங்களாக தொடர்ச்சியாக அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை மாணவனான கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.