சீனாவின் ஃபுஸோ மாகாணத்தில் உள்ள பண்டாக்களுக்கான பிரத்தியேக ஆய்வு நிலையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்த பாஸி, 37 வயதில் மரணமடைந்துள்ளது.

மனிதனின் ஆயுளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது, நூறு வயதுக்கு மேல் வாழ்ந்த மனிதருக்குச் சமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸி என்ற இந்த பண்டா கரடி, அதன் சுமார் நான்கு வயதில் கண்டெடுக்கப்பட்டது. அன்று முதல் இது மேற்படி ஆய்வு நிலையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தது.

1990ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்களின் இலச்சினையாக விளங்கிய பண்டா உருவம், பாஸியை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பண்டா இனக் கரடிகள் சீனாவின் அடையாளமாகக் கருதப்படுவதுடன், மிகவும் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான சீனாவின் முயற்சியால், அழிவை நோக்கியிருந்த இந்த கரடி இனம் மீண்டும் பெருகத் தொடங்கியுள்ளது.