தமது அணுவாயுத பலத்தைப் பிரயோகித்து ஜப்பானை அடியோடு மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவைச் சாம்பலாக்கப் போவதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியா அண்மையில் நடத்திய அணுவாயுதப் பரிசோதனையையடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை பிரேரணை கொண்டுவந்தது. 

திங்களன்று கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணையில், வடகொரியாவின் ஆடை ஏற்றுமதியையும், வடகொரியாவுக்கான எரிபொருள் வினியோகத்தையும் தடை செய்வதாக குறிப்பிட்டிருந்தது.

அந்தப் பிரேரணைக்கு ஜப்பானும் அமெரிக்காவும் ஆதரவளித்தன. இதையடுத்தே, அவ்விரு நாடுகளையும் வடகொரியா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு என்றும், சாத்தானின் கருவி என்றும் பாதுகாப்புச் சபையை விமர்சித்திருக்கும் வடகொரியா, அதனுடனான உறவுகளை முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

தனது ஆறாவாது அணுவாயுதப் பரிசோதனையை கடந்த மூன்றாம் திகதி வடகொரியா நடத்தியிருந்தது. இதுவரை நடத்திய பரிசோதனைகளில் இது மிகுந்த சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.