மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் சமயப் பாடசாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருபத்தைந்து பேர் உயிரிழந்தனர்.

தாஃபிஸ் தாருல் குரான் இத்திஃபாக்கியா என்ற இந்த மத்ரஸா பாடசாலையில் ஐந்து முதல் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் படித்து வருகிறார்கள். அவ்வப்போது அவர்கள் பாடசாலையிலேயே தங்குவதும் உண்டு.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் மாணவர்கள் வழக்கமாகத் தங்கும் பாடசாலைக் கட்டிடத்தின் மேல் மாடியில் தீ பரவியது. அப்போது மாணவர்கள் பலர் அங்கு தங்கியிருந்தனர். காலை நேரம் என்பதாலும், மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததாலும் தீ பரவ முன்னர் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாமல் போனது.

விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சுமார் ஒரு மணி நேரத்தினுள் தீயைக் கட்டுப்படுத்தினர். என்றபோதும் அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரையும் காப்பாற்ற முடியாமல் போனது.

விபத்தில் பலியானவர்களில் இருபத்து மூன்று பேர் மாணவர்களும், இரண்டு பேர் பாதுகாவலர்களுமாவர்.

விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

கடந்த இருபது வருடங்களில் மலேசியாவில் இடம்பெற்ற மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.