(ரொபட் அன்டனி)

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரத்துங்க, தொலைத்தொடர்பு  ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர்  தொடர்பான  நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தானே சில் துணிகளை வழங்குவதற்கு உத்தரவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

 எனவே அவர் மீது பொறுப்புக்கூறல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தற்போது யார் வேண்டுமானாலும்  தொடரலாம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர்  ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  இணை அமைச்சரவைப் பேச்சாளர்  இந்த விடயங்களை குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

சில்  துணி வழங்கப்பட்ட விவகாரம்  தொடர்பாக  ஆழமாக பார்க்கவேண்டும்.  இந்த சில் துணிகளுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவான துண்டுப்பிரசுரங்களும்   கடிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. 

2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.  மேலும்  இந்த விடயத்தில் யாராவது  வழக்குத்தாக்கல் செய்தால் தான் தன்னிடமிருக்கின்ற   ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக அவர்  கூறியிருந்தார். 

அந்த வகையில் இவ்வாறு  தேர்தல் சட்டங்களை மீறக்கூடாது என  அப்போதைய  ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஆனால் அவரே  அந்த சட்டவிதிமுறைகளை மீறியிருக்கின்றார். 

இங்கு அதிகாரம்  தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணையாளர்  எச்சரிக்கை விடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில்  நீதிபதி சட்டமீறல்களை  சரியான முறையில் விபரித்திருக்கின்றார். 

கேள்வி: சில் துணிகளை வழங்குமாறு  தானே கூறியதாக  முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த தற்போது கூறியிருக்கிறாரே?

பதில்: அவர் தற்போது  வீரன் போன்று பேசுவதில் அர்த்தமில்லை.  அவரின் கூற்றைப் பார்க்கும்போது அவர் தவறு செய்திருப்பதாகவே தெரிகிறது.  இந்த வழக்கு 24 நாட்களாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில்  மஹிந்த ராஜபக்ஷ  நீதிமன்றத்தில் ஆஜராகி எதனையும் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால்  ஏதாவது நடந்திருக்கலாம்.