தமிழகத்தில் இராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலம் ரோட்டில் இது வரை 100 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதை அப் பகுதி மக்கள் கேக் வெட்டி வித்தியாசமான முறையில் நினைவு கூர்ந்துள்ளனர்.

1988 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 2 ஆம் திகதி பாம்பன் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.

பாம்பன் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து, எதுவித பிரச்சினைகளுமில்லாது நடைப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த பாலத்தை புனரமைக்கும் விதமாக கடந்த ஜுன் மாதம் 2.6 ரூபா கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை துறையால் வழு வழுப்பு தார் பாதை போடப்பட்டது.

புனருத்தாபன பணிகளுக்குப் பின்னர் 50 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 200 மீற்றர் தூரத்திற்கு வழு வழு பாதையை அகற்றினர்.

இருந்தும் குறித்த பாதையால் இது வரையில் 100 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 100 ஆவது விபத்தை அப்பகுதி மக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கேளிக்கை செய்யும் வகையில் விநோதமாக கேக் வெட்டி சாரதிகளுக்கு வழங்கி கொண்டாடினர்.