நுவரெலியாவில் இடம்பெற்ற செயல்பட்டு மகிழ்வோம் என்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய 9 வயது மாணவி டயகம நகரத்தில் மரக்கறி ஏற்றும் லொறி ஒன்றில் மோதுண்டு பலியான சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி டயகம கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் என்டன் ருக்ஸி (வயது 9) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவி நுவரெலியாவில் இடம்பெற்ற செயல்பட்டு மகிழ்வோம் என்ற நிகழ்வில் கலந்து கொண்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

குறித்த மாணவி வீதியின் மருங்கில் சென்ற பொழுது தனது கட்டுப்பாட்டை மீறி டயகம ஈஸ்ட் பகுதியிலிருந்து டயகம நகரத்திற்கு வந்த மரக்கறி லொறி மாணவியின் மீது மோதியதால் அம்மாணவி ஸ்தலத்திலேயே மரணமடைந்தள்ளார் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்த அதேவேளை சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்திருப்பதோடு, லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.