கொரிய ஜனநாயக மக்கள் குடியரசால் கடந்த 3 ஆம் திகதி பரீட்சிக்கப்பட்ட 6 ஆவது அணுசக்தி பரிசோதனைக்கு இலங்கை தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

கொரியாவின் இத்தகைய செயற்பாடானது மக்கள் நலனுக்காக ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானங்கைளை மீண்டும் மீண்டும் மீறுகின்ற தான் தோன்றித்தனத்தை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது எனவும் குறித்த பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் சமாதானத்திற்கும் ஸ்தீரதன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இயற்கையை பாதுகாப்பதற்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை கடைப்பிடிப்பதற்கும், கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்வுக்குக் கொண்டுவருவதற்கும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு கொரிய ஜனநாயக மக்கள் குடியரசை இலங்கை வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையால் கையொப்பமிட்ட புதிய தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை ஐ.நா பாதுகாப்பு சபை முடிவுகளை நிறைவேற்றுவது தொடர்பில் மீண்டும் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.