அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக பெங்களூரு நீதிமன்ற உத்தரவை மீறி கூட்டம் நடத்தி, அதில் அமைச்சர்கள் பங்குபற்றினால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தினகரன் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக நிர்வாகியுமான புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

‘சென்னையில் இன்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த பெங்களூரு உரிமையியல் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அந்த தடையை மீறி கூட்டம் நடத்தினால் அமைச்சர்கள் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியவர்கள் ஆவார்கள். இதனால் அவர்கள் பதவியை பறிக்க சட்டத்தில் இடம் உள்ளது.  சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், மேல்முறையீடு செய்த மனு மீது தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால் பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எந்த கருத்தும் கூறவில்லை. அதேபோல பெங்களூரு நீதிமன்ற உத்தரவுக்கு தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு அப்படியே உள்ளது. அந்த தடையை மீறி பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

நீதிமன்ற உத்தரவை மீறிய அமைச்சர்கள் பதவியை பறிக்க சட்டத்தில் இடம் உள்ளது. பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நோட்டீசை சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று காலை ஒட்டினோம். அதை கிழித்து விட்டார்கள். பின்னர் சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்துக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டு உள்ளது. பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் தனியார் திருமண மண்டப மேலாளரிடமும் வழங்கினோம். திருமண மண்டப கதவிலும் நீதிமன்ற உத்தரவு நகலை ஒட்டி உள்ளோம். அமைச்சர்களின் அலுவலகங்களில் இந்த உத்தரவை வழங்கினோம். ஆனால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர் இதனால் அமைச்சர்களின் வீட்டு சுவர்களில் ஒட்டி உள்ளோம். இந்த உத்தரவையும் மீறி கூட்டம் நடத்தி அதில் முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டால் அனைவர் மீதும் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

நீதிமன்ற உத்தரவில் கீழமை நீதிமன்றம், வெளி மாநில நீமின்றம் என்ற பாகுபாடு கிடையாது. எந்த நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் அந்த உத்தரவு செல்லுபடியாகும். நீதிமன்ற உத்தரவை மதிக்கவேண்டியது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கடமையாகும். ’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்