பொது செயலாளர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட சசிகலாவை, அப்பொறுப்பிலிருந்து ரத்து செய்வது தொடர்பான தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறியது.

அதிமுகவின் பொதுசெயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர், அக்கட்சி அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் என பிரிந்தன. இவ்விரு அணிகளும் பலசுற்று பேச்சு வார்த்தைக்கு பின் கடந்த சில வாரங்களுக்கு முன் இணைந்தன. இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவிற்கு, சுமார் 2,500 உறுப்பினர்களில் 2,140 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்தனர். அழைப்பிதழை காண்பித்த பிறகே அவர்கள் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். அழைப்பிதழ் இல்லாத யாரும் உள்ளேச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கும் அரங்கில் பொலிஸார் குவிக்கப்பட் டிருந்தனர்.

முதலில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதனையடுத்து, 10.35 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் அனைத்தும், ‘பொதுக்குழு அழைப்பிதழில், “தற்போது கழகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டன.

அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு, ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக தெரிவு செய்தது ஆகியவற்றுக்கு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அ.தி.மு.க.வை வழி நடத்த கழக சட்ட திட்ட விதி 20(5)ன்படி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்குதல், ராமன் - லட்சுமணன் போல் அதிமுகவை காப்பாற்ற முதல்வர் துணை முதல்வர் ஒன்றிணைந்துள்ளதை பாராட்டுதல், தமிழக அரசின் சார்பின் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்தல், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் முன்னர் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும், கட்சிப்பொறுப்புகளில் புதியவர்களை நியமித்தும், பொறுப்பு வகித்து வந்தவர்களை நீக்கியும் ரி ரி.வி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என்றும், பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்றும் 14 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

தகவல் : சென்னை அலுவலகம்