இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

எஸ்டோனியா குடியரசு, பெரு குடியரசு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களே தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

ரிஹோ குரூ எஸ்டோனியா குடியரசின் தூதுவர், ஜோர்ஜ் ஜுவான் கஸ்டனிடா மெண்டிஸ் பெரு நாட்டின் தூதுவர், சுலாமனீ சார்ட்சுவான் தாய்லாந்து தூதுவர் ஆகியோரே தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

சிறந்த நட்புறவுகளை பேணி வரும் நாடுகள் தமக்கிடையே உறுதியான நீண்ட கால இருதரப்பு உறவுகளை உறுதிசெய்வதற்கு பொருளாதார கூட்டுறவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தூதுவர்களிடம் தெரிவித்தார்.

நட்பு நாடுகளுடன் பலமான பொருளாதார உறவுகளை பேணுவதற்கு இலங்கை விரும்புவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாந்து, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.