இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நலன் கருதி ஹொரவப்பொத்தானை ரிதிகஹவவெவ ஸ்ரீ சத்தர்ம ஜோதிகாராமையில் நிருவப்பட்ட 250 ஆவது நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். 

குறித்த நிகழ்விற்காக மகா சங்கத்தினர் விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி.ஹாரிசன் அநுராதபுர மாவட்ட சிறுநீரக நோய் தடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி திஸ்ஸ கரலியத்த பாதுகாப்பு படைகளின் தளபதி அத்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சின்னையா முப்படைகளின் மூத்த அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 350 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெறுகின்றனர்.

ஜனாதிபதியால் அப் பகுதியில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 600 பேருக்கு சிறிய அளவிலான சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவனால் மேற்கொள்ளப்படுகின்ற இம் முயற்சியை பாராட்டி பொறியியலாளர் கப்டன் பிரியங்கர திசாநாயக்கவிற்கு ஜனாதிபதி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.