ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை, உலக முதலுதவி தினமாக பின்பற்றப்படுகிறது. 

இன்றைய திகதியிலும் எம்மவர்கள் பலரும் விபத்தில் அடிப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பெறுவதற்குள் அவர்களுக்கான கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் பாதுகாப்பான நேரம் என்பது கடந்துவிடுகிறது. ஆனால் அடிப்பட்டவுடன் அவருக்குரிய முதலுதவி வழங்கப்பட்டிருப்பின் இவர்களின் பெரும்பாலானவர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அதனால் இன்றிலிருந்தாவது முதுலுதவியைப் பற்றி தெரிந்து கொண்டு, ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற முன் வருவோம்.

ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைத்தான் முதலுதவி சிகிச்சை.

ஆபத்தான் நிலையில் இருப்பவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டும் அல்லது என்ன செய்யவேண்டும் என்பது குறித்து சமயோசிதமாக யோசித்து செயல்படவேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும் வரை அவர்களுடன் இருந்து அளிக்கப்பட்ட முதலுதவி குறித்த அனைத்து விவரங்களையும் மருத்துவர்களுடனோ அல்லது மருத்துவத்துறை ஊழியர்களிடமோ பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அத்துடன் தவறாமல் எம்முடைய வீடுகளில் முதலுதவிப் பெட்டி என்ற ஒன்றை இடம்பெறவைக்கவேண்டும். அதில் காயம் பட்ட இடத்தை சுத்தப்படுத்துவதற்கான துணி, பேண்டேஜ் துணி, நோய் கிருமிகளை அழிப்பதற்கான மருந்து அல்லது களிம்பு (ஓயின்மெண்ட்), டேப் ரோல்கள், நல்ல நிலையில் இருக்கக்கூடிய கத்திரிக்கோல், தீக்காயங்களுக்கான களிம்பு, இதய பாதிப்பு போன்றவற்றிற்கான நிவாரணமளிக்கும் மாத்திரைகள், சிறிய குறிப்பு புத்தகம் மற்றும் பேனா ஆகியவை இடம்பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்த குறிப்பு புத்தகத்தில் அருகாமையுள்ள மருத்துவமனையின் தொலைபேசி எண், அவசர சிகிச்சைக்குரிய எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும்.

முதலுதவி அளிப்பவர்கள் எக்காரணம் கொண்டு பதட்டமடையாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையான முறையில் பேசிக் கொண்டிருக்கவேண்டும். இதனால் அவர்கள் முதலில் தங்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுவித்து கொள்வார்கள். சிகிச்சையை எதிர்கொள்வதற்கான மன துணிவைப் பெறுவார்கள். இதுவும் அவர்களை காப்பாற்றுவதற்குரிய முதலுதவி சிகிச்சையே.

டொக்டர் பிரேம் ஆனந்த்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்