இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்கையின்  வரலாற்று சிறப்பு மிக்க கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர்  ஆலய வருடாந்த திருவிழாவின் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று  மிக சிறப்பாக  இடம்பெற்றது.

கல் நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக  கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றதுடன் பாரம்பரிய நடைமுறைகளினைக்கொண்டு நடைபெறும் ஆலய  கொடியேற்றத்தின்போது நெற் கதிர்கள் கொடிக்  கயிறாக திரிக்கப்பட்டு கொடியேற்றம் நடாத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

அந்தவகையில் இந்த வருடமும்  கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து 17 நாட்களாக நடைபெற்று நேற்று  தேர் திருவிழா நடைபெற்றதோடு , இன்று  தீர்த்தோற்சவம் இடம்பெற்று ஆலய திருவிழா   நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது,.