ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்களில் ஒருவரான தெனசிறி பிரஞ்சரத்ண சிறிசேன அல்லது லால் சிறிசேன என அறியப்படும் நபர் கெப் ரக வண்டியொன்றில் பயணிக்கும் போது மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த இருவரை மோதியதில் அவ்விருவரும் உயிரிழந்துள்ளனர்.

Related image

இது தொடர்பில் ஜனாதிபதியின் சகோதரரான குறித்த சந்தேக நபரை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலன்னறுவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தின்போது படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து வந்த 48 வயதுடைய நபர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததோடு, 58 வயதுடைய மோட்டார் சைக்களில் ஓட்டுநர், நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கெப் ரக வாகனம், சம்பவம் இடம்பெற்ற இடத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாகவும் எனினும் பின்னர், கெப் ரக வாகனத்தின் சாரதி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.