மஸ்கெலியா - பிரவுண்லோ தோட்டம், பிரவுண்லோ பிரிவில் வீடொன்றின் மீது, நேற்று இரவு 9 மணியளவில், கற்பாறை சரிந்து விழுந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வீட்டினுள் இரு ஆண்கள், இரு பெண்கள்,  ஐந்து சிறுவர்கள் உட்பட 9 பேர் இருந்துள்ளனர். எனினும்  யாருக்கும்  எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்  அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும்  தெரியவருகிறது.

மேற்படி 9 பேருடன், குறித்த தொடர் லயக்குடியிருப்பில் உள்ள ஏனைய 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும், மொத்தமாக 30 பேர் தற்போது பிரவுண்லோ தோட்ட கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் தொடர்ந்து நிலவிரும் சீரற்ற காலநிலை காரணமாக, இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை சீராக்கும் பணியை தோட்ட நிர்வாகமும், மவுஸ்ஸாக்கலை இராணுவத்தினரும், மஸ்கெலியா பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களை விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

மலையகத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் சீரற்ற காலநிலையால்; மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.