திருகோணமலை கந்தளாய் பகுதியில் மதுபோதையில் நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் சென்ற வாகனம் மீதும் அவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் தீவரகம, வாத்தியாகம, பகுதியைச் சேர்ந்த எஸ்.மதுசான் வயது(22), கசுன் மதுசங்க வயது(20), வி.ஏ.சாந்த குமார வயது(24) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.       

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாத்தியாகம பகுதியில் குறித்த மூன்று இளைஞர்களும் மது அருந்திவிட்டு அப்பகுதியில் கடமை நிமித்தம் சென்ற நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியதோடு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த கந்தளாய் பொலிஸார் சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்து கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.