தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வட்டவளை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருதாகவும் வைத்தியசாலையின் உத்தியோகஸத்தர் ஒருவர் தெரிவித்தார்.

 

முன்னால் வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ள தாகவும், இதன்போது மற்றுமொரு முச்சக்கரவண்டியொன்று தமக்கு உரிய பக்கத்திலிருந்து மாற்று பக்கத்தில் வந்ததனால் அந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வீதியால் செல்லுமாறு  பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.