மெக்சிகோ நாட்டின் தெற்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு நூற்றாண்டில் தமது நாட்டில்  இடம்பெற்ற மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மெக்சிக்கோவின் அண்டை நாடான குவாட்டமாலாவிலும் இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நிலநடுக்கம் 8.1 ரிச்டரில் gதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் அறிவித்திருந்த போதிலும் மெக்சிக்கோவில் அளவிடப்பட்ட ரிச்டர் அளவில் அது 8.2 என மெக்சிக்கோவின் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 70 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவின் பிஜிஜியாப்பன் நகரில் இருந்து தென்மேற்குத் திசையில் 87 கிலோ மீற்றர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

மெக்சிகோ, குவாட்டமாலா, எல்சல்வடோர், கோஸ்டாரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரீன்விச் நேரப்படி 04.50 மணிக்கு ஏற்பட்டு, சுமார் ஒரு நிமிட நேரம் நீடித்த அந்த நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து சுமார் 1,000 கிலோ மீற்றர் தொலைவில் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் சுமார் 5 கோடி பேர் அந்நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மெக்சிகோவின் தெற்குப் பகுதியிலும், குவாட்டமாலாவின் மேற்குப் பகுதியிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தின் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

குவாட்டமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரேல்ஸ் நாட்டு மக்களை அமைதி காக்குமாறு அவரது டுவிட்டர் பக்கத்திலும் தொலைக்காட்சியிலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெக்சிகோவின் இன்னொரு அண்டை நாடான அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளில் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுகடப்படவில்லை.

மணிக்கு சுமார் 300 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் 'கேட்டியா' என்னும் சூறாவளிக் காற்றால் மெக்சிகோவின் கிழக்கு கடலோரப் பகுதிகளும் ஏற்கனவே அச்சுறுதலைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.