இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 போட்டியில் இடம்பெற்ற நாணயச்சுழற்சியின் சூழ்ச்சி தொடர்பில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு - 20 போட்டி கடந்த 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியின் போது தொகுப்பாளராக கடமை புரிந்தது இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் ஆவார். போட்டித் தீர்ப்பாளராக அன்டி பைகுரேப்ட் கடமை புரிந்தார்.

நாணயத்தை இலங்கை அணித்தலைவர் சுண்டும் போது தலை என இந்திய அணியின் தலைவர் விராட் கோலி கேட்டுக் கொண்டார். 

எனினும் சுண்டப்பட்ட நாணயம் சற்று தூரம் சென்றதால், அவ்விடத்துக்கு சென்ற போட்டித் தீர்ப்பாளர் 'பூ' எனத் தெரிவித்தார். 

அதற்கிடையில் குறுக்கிட்ட முரளி கார்த்திக் அது தலையெனத் தெரிவித்து, தனது கையில் இருந்து ஒலிவாங்கியை உடனடியாக கோலியிடம் நீட்டினார்.

அப்போது உடனடியாக போட்டித் தீர்ப்பாளர்  முன்வந்து கையை நீட்டியபோதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இலங்கை அணியின் தலைவரும் எவ்வித அவதானமுமில்லாது கோலியை முன்னுக்கு வருவதற்கு இடமளித்து விட்டு பின் நகரந்து சென்று விட்டார்.

குறித்த காணொளி இணையத்தளங்களில் வைரலாக பரவிவருவதையடுத்து சம்பவம் தொடர்பில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

“நாணயச் சுழற்சியின் முடிவை போட்டியின் தீர்ப்பாளர் சரியாகத் தான் தெரிவித்திருந்தார். ஆனால் ஊடகங்களில் நாணயச்சுழற்சியின் முடிவு தொடர்பில் பிழையான கருத்துக்கள் வெளியிடப்படுவதாக தரங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐ.சி.சி.யோ இலங்கை கிரிக்கெட் சபையோ அல்லது இந்திய கிரிக்கெட் சபையோ எவ்வி நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதுடன் அங்கு அருகிலிருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்குகூட விளங்கவில்லையாவென கிரிக்கெட் ஆர்வர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, போட்டியின் தீர்ப்பாளர் அதனை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அவரும் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை தனது உத்தியோ டுவிட்டர் பக்கத்தில் குறித்த சம்பவம் சரியானது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.