பச்சிலைப்பள்ளி  பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  வேம்போடுகேணி  கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றையதினம்  கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால்  500 கிலோகிராம் நிறையுடைய கிபிர்க்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் காலை முதல்  பளை பொலிசாரால்  குறித்த இந்திராபுரம் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமிற்றர் சுற்றளவில் உள்ள கிராம மக்களை வெளியேறுமாறும் நேற்று நான்கு மணிக்கு  பாரிய  குண்டு செயலிழக்கப்பட உள்ளதாகவும்  ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  வயதானோர்களை  வாகனங்களிலும் பொலிசார் ஏற்றி அக் கிராமத்தை விட்டு அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர்  இந்திராபுரம் பகுதிக்கு வருகைதந்த விமானப் படையினர் குறித்த கிபிர்க் குண்டினை  சுமார் பத்து அடிக் குழி ஒன்றினைத் தோண்டி அதனுள் வீழ்த்தி செயலிழக்கச் செய்துள்ளனர்.

செயலிழக்கச் செய்யும் பொழுது யாழ் கண்டி வீதியின் போக்குவரத்து முகமாலைப் பகுதியிலும் பளைப் பகுதியிலும்  நிறுத்தப்பட்டே  செயலிழக்கவைக்கும் பணி  இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதனை அண்டிய பகுதிகளில் பாரிய சத்தத்துடனும் அதிர்வுடனும் குண்டு வெடித்ததாக அயலில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.