மலையகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டுமென மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலையக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போர் கொடி தூங்குகின்றவர்கள் அல்ல. ஆனால் அதனை செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். சோமாலிய மக்கள் கடல் கொள்ளையர்களாக மாறியதற்கு முக்கிய காரணமே அவர்களுடைய வறுமை நிலையே. எனவே வறுமைக்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் அது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமின் வேண்டுகோளுக்கு இணங்க தெத் சமன சபையின் அனுசரணையுடன் நுவரெலியா பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கின்ற குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், மேல் மாகாண சபை உறுப்பினர் நாளந்த குணசேகர, மத பேதகர் குமார மென்டிஸ், மலையக ஆசிரியர் முன்னணியின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம்.

மலையகத்தில் இருக்கின்ற மக்கள் நாட்டில் ஆட்சி அமைக்கின்ற எல்லா அரசாங்கத்திற்கும் வாக்களித்திருந்தாலும் அவர்களுடைய ஏழ்மை நிலையை போக்குவதற்கு எந்த விதமான விசேட வேலைத்திட்டங்களும் ஆட்சி செய்த அரசாங்கங்கள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே நல்லாட்சி அரசாங்கம் அதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க முன்வரவேண்டும். முன்னால் ஜனாதிபதி மறைந்த ரணசிங்ஹ பிரேமதாச அன்று முன்னெடுத்த ஜனசவிய திட்டத்தை போன்ற ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வறுமை நிலைமை இன்னும் தீர்க்கப்படவில்லை. அவர்களை எல்லோரும் வாக்களிக்கும் இயந்திரமாகவே பார்க்கப்படுகின்றார்கள். இந்த அரசாங்கமும் அதே நிலைமையையே பின்பற்றி வருகின்றது.

எமக்கு வாக்களித்த மக்களை வறுமைக் கோட்டின் கீழ் இருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. எனவேதான் நாங்கள் தனியே அரசாங்கத்தை மாத்திரம் நம்பி இல்லாமல் தனியாரிடம் இருந்தும் ஒரு சில பொது அமைப்புகளிடம் இருந்தும் உதவிகளை பெற்று சிறு சிறு உதவிகளை செய்து வருகின்றோம். ஆனால் இது போதுமானது அல்ல. இதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். எங்கள் மக்களுக்கு சமுர்த்தி உதவிகள் கூட முறையாக கிடைப்பதில்லை. அதற்கு காரணம் ஒரு சில கிராம சேவகர்கள். அவர்கள் எங்களுடைய மக்களை இனவாத கண் கொண்டு பார்த்து பழகிவிட்டார்கள். எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.