"முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"

Published By: Digital Desk 7

06 Sep, 2017 | 03:09 PM
image

"வடமாகாணத்தின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களைக் கொண்ட எருக்கலம்பிட்டிக் கிராம மக்கள் 1990ஆம் ஆண்டில் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறுண்டு வாழ்ந்து வருவது மனவருத்தத்திற்குரியது" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று   மாலை இடம் பெற்ற ஹஜ் பெருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"எருக்கலம்பிட்டியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்களில் கணிசமான தொகையினர் மீள தமது பிரதேசங்களுக்கு வந்து குடியமர்ந்துள்ள போதிலும் குறிப்பிட்ட தொகையினர் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்த இடங்களில் தமக்கென இருப்பிடங்களைத் தயாரித்துக் கொண்டு அப் பகுதியிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரே குடும்பம் போன்று இந்த எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் வாழ்ந்து வந்த போதிலும் 1990ல் ஏற்பட்ட குழப்ப நிலைமைகள் அவர்களின் சிதறுண்ட வாழ்க்கை அமைப்பை உருவாக்கி விட்டது.

எருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் பற்றி நான் ஓரளவு அறிவேன், இவர்கள் பகைமை உணர்வு அற்றவர்கள், அனைத்து மதத்தவர்களையும் சகோதரர்களாக கருதுபவர்கள், இவர்களின் வாழ்வு இன்று சிதறுண்டு கிடக்கின்ற போதும் இஸ்லாமிய மக்களின் 5வது இறுதிக் கடமையாகிய ஹஜ் விழா நிகழ்விலாவது எருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இங்கு வந்து ஒன்று கூடி தமது அன்பையும் மகிழ்வையும் தெரிவித்து இஸ்லாத்தின் அதி உயர் கடமைகளை சிறப்புற ஆற்ற வேண்டும் என்ற கொள்கையில் 2002ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வானது இந்த வருடமும் சிறப்புற கொண்டாடப்படுவது மகிழ்விற்குரியது.

இந்து சமயத்தில் ஒரு இறையடியார் சரிதம் உண்டு, சிறுத் தொண்ட நாயனார் என்ற ஒரு அடியவர் தினமும் தான் உணவு உண்பதற்கு முன்பதாக ஒரு சிவனடியாரை அழைத்து வந்து உணவு அருந்தச் செய்து அவர் உணவு அருந்திய பின்பே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை கொண்டிருந்தார். 

ஒரு நாள் அவர் எங்கு தேடியும் ஒரு சிவனடியாரைக் காண முடியவில்லை, அத் தருணம் அருகே உள்ள சிவன் கோவில் மண்டபத்தில் ஒரு சிவனடியாரைக் கண்டு உணவருந்த வருமாறு அழைக்கின்றார், மாறு வேடத்திலிருந்த இறைவன் இவரைச் சோதிப்பதற்கு திருவுளம் கொண்டு நான் உணவருந்த வருவதாயின் நர பலி உணவு படைக்க வேண்டும் அதுவும் இளம் பாலகனின் உடலைக் கறி செய்து தர வேண்டும் என உத்தரவிடுகிறார், ஒரு கனம் கலங்கிய சிறுத்தொண்ட நாயனார் பக்தி மேலீட்டினால் வீட்டிற்கு ஓடிச் சென்று மனைவியாரிடம் இவ் விடயத்தை கூறி பதிலுக்குக் காத்திராமல் பாடசாலைக்கு ஓடிச் சென்று தமது சிறிய பாலகனை அழைத்து வந்து பன்னீரால் குளிப்பாட்டி ஆரத்தழுவி அறுத்துக் கறி சமைத்து சிவனடியாருக்கு உணவு படைத்த போது இவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த இறைவன் மீண்டும் இவர்களின் பாலகனை உயிர் பெறச் செய்து மீள ஒப்படைத்ததாக சிறுத்தொண்ட நாயனார் வரலாறு கூறுகிறது.

இஸ்லாத்தின் 5வது இறுதிக் கடமையும் இந்து சமயத்தின் சிறுத் தொண்ட நாயனார் கதைக்கு ஒப்பானதே. ஈத் அல் அதா என்பது தியாகத் திருநாளாகும்.  நபிமார்கள் பட்டியலில் இருந்த இப்ராகிம் - காஜரா உம்மா தம்பதிகள் இந்த தியாகத் திருநாளின் 8வது பிறையில் கனவு காண்கிறார்கள்.

சைத்தானின் தூண்டுதலால் ஏற்பட்ட கனவின் படி 100 ஒட்டகங்களை அறுத்து அல்லாவுக்குக் காணிக்கையாக அளிக்கின்றார்கள். ஒன்பதாவது நாளும் மீண்டும் அதே கனவு காண்கிறார்கள். இப்போது 200 ஒட்டகங்களை அறுத்து அல்லாவுக்கு காணிக்கையாக்குகின்றார்கள். மீண்டும் 10ம் நாள் அதே கனவு. அல்லாவிடம் என்ன செய்ய வேண்டும் என இரந்து கேட்கின்றார்கள். 

அவர்கள் யாரை மிகவும் நேசிக்கின்றார்களோ அவரை அறுத்து காணிக்கையாக செலுத்த வேண்டும் என அருள் வாக்கு கிடைக்கப்பெறுகின்றது. இத் தம்பதியினர் 96 வயதிலேயே ஒரு அரிய மகனைப் பெற்று இஸ்லாத்தின் வழியே அன்புடன் வளர்த்து வருகின்றார்கள். ஆண்டவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு 6 வயது நிரம்பிய இஸ்மாயிலை அறுக்கத் துணிகின்றார்கள். இஸ்மாயிலும் அன்புடன் ஏற்றுக் கொள்கின்றான்.

தன்னை அறுக்கும் போதும் தந்தை கலங்கக் கூடாது என்பதற்காக அவரை கறுப்புத் துணியினால் முகத்தை மூடிக் கொண்டு அல்லது தன்னைக் குப்புற இட்டு அறுக்குமாறு கூறுகின்றான். துயர மிகுதியுடன் பிள்ளையை அறுக்கின்றார்கள். அறுக்க முடியவில்லை. அந்தக் கத்தியால் பாறாங்கற்களை வெட்டுகின்றார்கள். அவை தூள் தூளாக உடைந்து நொருங்குகின்றன. 

ஆனால் பிள்ளையின் கழுத்தை அறுக்க முடியவில்லை. அப்போது நபி அவர்களின் தூதுவரிடமிருந்து ஒரு செய்தி கிடைக்கின்றது, ஒரு ஆட்டைப் பலியிட்டு இந்த இறை கடமையை நிறைவேற்று என்று, அவ்வாறே அக்கடமை நிறைவேற்றப்படுகின்றது.

இந்த நிகழ்வை நினைவுறுத்தும் வண்ணமே தியாகத் திருநாளன்று ஒரு மிருக பலி இடப்பட்டு அதன் மூன்றில் ஒரு பங்கு ஏழை எளியவர்களுக்கும் அடுத்த மூன்றில் ஒரு பங்கு உற்றார் உறவினருக்கும் மிகுதிப் பங்கு குடும்பத்தாருக்கும் பங்கிடப்படுகின்றது. 

இந்த இரண்டு சம்பவங்களும் இந்து சமயத்திலும், இஸ்லாம் மதத்திலும் முழு நம்பிக்கையுடன் ஒழுகக்கூடியவர்களுக்கு ஏற்படக் கூடிய சோதனைகளையும் அவர்களின் மன உறுதியைக் கண்டு அவர்களை இறைவன் ஆட்கொள்கின்ற தன்மையையும் எடுத்துக் கூறுகின்றன. எனவே எல்லா மதங்களும் அன்பையும் இறைவனை நேசிக்கும் தன்மையையும் பிறரிடத்தில் அன்பு செலுத்துகின்ற மார்க்கங்களையுமே எடுத்துரைக்கின்றன. 

ஆனால் தியாகமே மார்க்க வழி, தியாகத்தையே இறைவன் விரும்புகின்றான். அதை எங்கள் இரு மதங்களுமே வலியுறுத்துகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து எருக்கலம்பிட்டியைச் சென்றடைவதற்கு வெவ்வேறு  பாதைகள் உண்டு.

பூநகரி சங்குப்பிட்டியூடாக ஒரு பாதை, வவுனியா செட்டிகுளம் ஊடாக இன்னோர் பாதை, மதவாச்சி முருங்கன் ஊடாக இன்னோர் புகையிரதப் பாதை இவை போன்றதே எமது சமய வழிகாட்டல் பாதைகள். இந்து சமயத்திற்கு ஒரு பாதை, இஸ்லாம் சமயத்திற்கு இன்னொரு பாதை, கிறிஸ்தவ சமயத்திற்கு மற்றொரு பாதை. 

ஆனால் தொடக்கம் முடிவு இரண்டும் நிரந்தரமானவை செல்கின்ற பாதைகள் மட்டுமே  வெவ்வேறானவை.

எனவே இன்றைய இந்த ஹஜ் விழா நிகழ்வுகளில் என்னையும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பிக்க வேண்டும் என றயீஸ் விரும்பியதால் உங்கள் அனைவர் சார்பான அழைப்பினை ஏற்று பல கடமைகளைப் பின் போட்டுவிட்டு இன்று இங்கே வருகை தந்திருக்கின்றேன். இந்த நல்ல நிகழ்வில் இறை பக்தர்களான உங்கள் நிகழ்வில் கலந்துகொண்டு ஒரு புதிய உணர்வைப் பெற்றிருக்கின்றேன். 

இறைவனின் படைப்பிலே ஆறறிவு கொண்ட ஒரு உயிரினமாக விஷேடமாகப் படைக்கப்பட்டது மனித குலம். ஆனால் அதே மனித குலம் மதத்தின் பெயரால் அடித்துக் கொண்டு சாவதும், பிரிந்து நிற்பதும் எமது அறியாமை, இதனை அனைத்து மதங்களும், மதத் தலைவர்களும் இடித்துரைக்கின்ற போதும் அதனை நாம் கேட்பதாக இல்லை.

இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்குகின்ற இந்த ஈழமணித் திருநாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் பகைமைகளை மறந்து சகோதரர்களாக வாழத் தலைப்பட்டால் இந்த நாட்டுக்கு இணை இந்த நாடு மட்டுமே இருக்க முடியும்.

எனவே காலங்கடந்த இந்த நிலையில் கூட எமது மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். சமஷ்டிப் பாதையே அந்த ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

அதுவே எமக்கு நிலையானதும், நிரந்தரமானதுமான ஒரு தீர்வாக அமையும் எனத் தெரிவித்து இஸ்லாம் மதத்தின் இந்த உன்னத நாளில் இஸ்லாம் சகோதர சகோதரிகள் அனைவரையும்  உளமார வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன் "என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11