தம்புள்ளை  நகரிலுள்ள வாடகை வாகனத் தரிப்பிடத்தில் இருந்து பெண்கள் அணியும் உடைக்கு சமமான உடையணிந்திருந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை தம்புள்ளை  பொலிஸார்  மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்ட தடியில் படிந்துள்ள இரத்தக் கரை மற்றும் சடலத்தில் காணப்படும் தழும்புகளை கொண்டு குறித்த இளைஞர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில்  உயிரிழந்துள்ள இளைஞர் இதற்கு முன்னர்  பலமுறை தம்புள்ள   நகரில் பெண்கள் அணியும் உடையுடன் நடமாடி கைது செய்யப்பட்டவராகுமெனப் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் குடை ஒன்றும், கைக்கடிகாரம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது வரை குறித்த கொலை சம்பந்தமாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு சடலத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை தடயவியல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையில் தம்புள்ளை பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.