அண்மைக்காலமாக தெற்காசியா முழுவதும் மூளைச் சாவு அடைந்தவர்கள் தங்களின் உடலுறுப்புகளை தானமாக தருகின்றனர் என்பதைப் பற்றி கேள்வி பட்டிருப்போம்.

அதே போல் பலரும் பொதுவாக  ECG யைப் பற்றி அறிந்து வைத்திருப்பார்கள். இதயத்துடிப்பு தொடர்பான பரிசோதனை என்றும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் EEG பரிசோதனையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

E E G என்றால் electroencephalogram என்று பொருள். அதாவது மூளையின் செயல்திறனைப் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வது. 

ஏன் அறிந்துகொள்ளவேண்டும்?இதனால் என்ன பயன்? என்று கேட்பர் பலர். 

இன்றைய திகதியில் பெரும்பாலானவர்கள் மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் போது இவர்களின் மூளையின் செயற்பாடு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிவதற்கு இந்த பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

பலர் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் கோமா நிலைக்கு சென்றுவிடுவர். அவர்களுடைய மூளையின் நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள இந்த பரிசோதனை அவசியமாகிறது.

மேலும் சிலர் சிறிய வயதிலேயோ அல்லது வேறு எந்த வயதிலேயோ வலிப்பு நோய்க்கு ஆளாகலாம். அதன் போது அவர்களின் மூளையின் நடவடிக்கை குறித்து அறிந்துகொள்ள இந்த பரிசோதனை முக்கியம். 

ஒரு சிலருக்கு மூளையில் குருதி கசிவு, கட்டி, புற்றுநோய் கட்டி ஆகியவை இருப்பதாக சந்தேகித்தால், அதனை இத்தகைய பரிசோதனை மூலம் உறுதி செய்து கொள்ளமுடியும்.

இவற்றையெல்லாம் விட சத்திர சிகிச்சைகளின் போது நோயாளிக்கு அளிக்கப்படும் மயக்க மருந்தின் கால அவகாசம் அதன் தன்மை ஆகியவற்றைக் குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளவும் இத்தகைய பரிசோதனை அவசியமாகிறது.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டும் சார்ந்ததல்ல மனத்தின் ஆரோக்கியத்தையும் சார்ந்தேயிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் அனைவரும், தங்களின் மன ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த E E G பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.

வைத்தியர்.கோடீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்