(க.கிஷாந்தன்)

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி காட்டுப்பகுதியில் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் ஹோட்டல் ஒன்றின் நிர்மாண பணிகளுக்கு மணல் ஏற்றிச்சென்று இறக்கியபின் மீண்டும் திரும்பகையில் இழுவை வண்டி ஒன்று குறித்த காட்டுப்பகுதிலேயே 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இழுவை வண்டியை செலுத்திய சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இழுவை வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற இடத்திலேயே இழுவை வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இழுவை வண்டியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மாயாண்டி வெள்ளையன் (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.