இன்றைய திகதிகளில் எம்முடைய பிள்ளைகளுக்கு ஏதேனும் உடல் அசௌகரியமோ அல்லது ஆரோக்கிய குறைபாடுகளோ ஏற்பட்டால் பெற்றோர்கள் தான் அதிகளவில் பதட்டமடைகிறார்கள். முதலில் பிரச்சினைகளை தள்ளிப்போடாதீர்கள். குழந்தைதானே வளர்ந்தால் சரியாகிவிடும் என்ற முடிவினை பெற்றோர்கள் சுயமாக எடுக்க வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனையுடன் முடிவினை எடுத்தால் சரியாக இருக்கும். இதன் மூலம் குழந்தைகளை இழக்க வேண்டிய வாய்ப்புகள் குறையும் என்பது தான் உண்மை. சத்திர சிகிச்சை என்றவுடன் பெற்றோர்கள் முதலில் பயப்படுவது மயக்க மருந்துகளுக்கு தான். அந்த பயம் தற்போது தேவையில்லை. குழந்தைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே மருத்துவ தொழில் நுட்பம் வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

குழந்தைகளுக்கான சத்திர சிகிச்சையின் போது மிக முக்கியமாக கருதப்படுவது கன்சர்வேடிஸம். அதாவது குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே சத்திர சிகிச்சையை தீர்மானிப்பது. இது எளிதான காரியமல்ல. ஏனெனில் சில சிக்கல்களுக்கு அவர்களின் வளர்ச்சியே தீர்வாக அமையலாம். பெரியவர்களுக்கு சத்திர சிகிச்சையின் போது நீரிழிவு, இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம் போன்ற இடையூறுகள் இருக்கும். ஆனால் இவையாவும் குழந்தைகளுக்கு கிடையாது. அதனால் சத்திர சிகிச்சையின் போது, அனத்தீஸ்யா வழங்கும் பணி கடினமாக இருக்காது. அதேப்போல், தோல் பகுதியில் வளர்ச்சி இருப்பதால், சத்திர சிகிச்சைக்கு பின்னரான வடுக்களும் விரைவில் மறைந்துவிடும். பெரியவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்கு நரம்புகள் எளிதில் கிடைக்கும். குழந்தைகளுக்கு இது சாத்தியமாவதில்லை. இவற்றையெல்லாம் விட பெற்றேர்களின் உணர்ச்சி நிலை (பேரண்ட்ஸ் எமோஷனல் ஸ்டேடஸ்) தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

குழந்தைகளுக்கான ஒவ்வொரு சத்திர சிகிசையின் போதும் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களின் ஒருங்கிணைப்பு பிரதானமாக கருதப்படுகின்றன. இதனால் பெற்றோர்களும், மருத்துவர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாவது தவிர்க்க இயலாத நிலையே காணப்படுகிறது.இருப்பினும் தற்போது நுண்துளை சத்திர சிகிச்சை குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் குறிப்பிடவேண்டும்.

வைத்தியர்.. பாலகோபால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்