யாழ்ப்பாணம் அச்சுவேலி தனியார் பேரூந்து சேவையானது எதிர்வரும் 2 ஆம் திகதியில் இருந்து மீள்குடியேற்ற பகுதிகளுக்கும் தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக வலிகிழக்கு தனியார் சிற்றூர்தி சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

கடந்த யுத்தகாலத்திற்கு முன்னர் வலி கிழக்கு பகுதிகளூடாகவும் சிற்றூர்தி சேவைகளானது இடம்பெற்றுவந்திருந்தது. எனினும் பின்னர் அப் பகுதிகள் உயர் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் அப் பகுதிக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே தற்போது அப் பகுதிக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலி கிழக்கு தனியார் சிற்றூர்தி சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.

இதன்படி மீள சேவையில் ஈடுபடவுள்ள பகுதிகள் தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அச்சுவேலி பஸ் நிலையத்தில் இருந்து சந்நிதி வீதியூடாக காற்றாட்டி சந்தியூடாக வளலாய் வடக்கு பாம்வீச் சந்தி சென்று அங்கிருந்து வளலாய் பிள்ளையார் கோவிலடி ஊடாக தம்பாலை சந்தியூடாக அச்சுவேலி யாழ்ப்பாண சேவை இடம்பெறவுள்ளது.

இதேபோன்று அச்சுவேலியில் இருந்து ஒட்டகப்புலம் ஊடாக மக்கோனா பாடசாலையூடாக சுதந்திரபுரம் சந்தியூடாக வசாவிளான் பாடசாலை வரைக்கும் மூளாய்க்கான பாதை (773) தற்காலிகமாக மேற்குறித்த எல்லை வரைக்கும் சேவையினை ஆரம்பிக்கின்றோம். இச் சேவையானது எதிர்வரும் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.