(ஆர்.யசி)

கொழும்பின் குப்பைகளை கொண்டு உர உற்பத்தியை முன்னெடுத்து வருவதாகவும் விரைவில் கொழும்பை ஆசியாவின் அழகான நகரமாக மாற்றுவதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் மாத்திரம் மாதமொன்றுக்கு 600 டொன் குப்பைகள் சேருவதாகவும் அவர் தெரிவித்தார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

கொழும்பின் குப்பைகள் மூலமாக இந்த நகரின் நீர் நிலைகளை பாதிக்கும் செயற்பாடுகளையும், கடல் வளங்களை அழிக்கும் நடவடிகைகளியுமே இதுவரை காலமாக நாம் மேற்கொண்டு வந்துள்ளோம். 

இதற்கு அரசாங்கம் மீது முழுமையாக பழிபோட முடியாது. இதனை  தீர்க்க முன்வந்த போது அதை தடுக்க பல்வேறு அரசியல் சூழ்சிகள் முன்னெடுக்கப்பட்டது. 

கொழும்பில் மாதாந்தம் 600 டொன் குப்பைகள் சேர்க்கப்படுகின்றது. இந்த குப்பைகளை கொண்டு இரசயான உரங்களை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தை இப்போது நாம் ஆரம்பித்துள்ளோம். இந்த திட்டங்களின் மூலமாக எதிர்காலத்தில் குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். 

விமர்சனங்களை கவனத்தில் கொண்டு எதையும் மாற்ற முடியாது. மாறாக சரியாக திட்டமிட வேண்டும். டெங்கு நோய் பரவலை நாம் தடுத்துள்ளோம். குப்பைகளை சரியாக கையாளும் நகர்வுகளை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.