அவசர அழைப்பொன்றை மனைவிக்கு எடுக்கவென கையடக்கத்தொலைபேசியை வாங்கிய நபர் தலைமறைவாகிய சம்பவமொன்று அட்டனில் இடம்பெற்றுள்ளது.

அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியரிடமிருந்தே கையடக்கத் தொலைபேசியை பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் நகர மத்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் எரிபொருள் நிரப்ப வாகன நெரிசல் காணப்பட்ட சந்தப்பத்தில் திடீரென அவ்விடத்திற்கு வந்த நபர் தனது மனைவிக்கு அவசரமாக அழைப்பொன்றை எடுக்கவேண்டும் என கூறி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடம் கையடக்கத்தொலைபேசியை பெற்றுள்ளார்.

அச் சமயம் அங்கு வந்த வாகனமொன்றுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்பி பார்த்த போது  35000 ரூபா பெறுமதியான  கையடக்கத் தொலைபேசியைப் பெற்றவர் தலைமறைவாகியுள்ளார்.

இச்சம்பவம் நிலையத்தின் சீ.சீ.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ள நிலையில்  அட்டன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசியுடன் தலைமறைவாகிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.