இலங்கை அணியினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். கண்ணீர் நிறைந்த கண்களுடன் நாங்கள் செல்கிறோம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய உட்பட தெரிவுக்குழு உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எழுதிய இராஜிநாமா தொடர்பான கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் இந்தக் கடித்த்தை பெரும் சோகத்துடனும் மனப்பாரத்துடனும் எழுதுகின்றேன். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் இராஜிநாமா செய்வதாக அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்.

அனைத்து வகையிலும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு வீரராகவும் முன்னாள் அணித் தலைவராகவும் அதேவேளை, தெரிவுக்குழுவின் தற்போதைய தலைவரென்ற முறையிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற சம்பவம் தலைகுனிய வைத்துள்ளது.

என் வாழ்நாள் முழுவதும் எப்போதும்  கிரிக்கெட் இருக்கும், எனவே எங்கள் வீரர்களை எமது சொந்த ரசிகர்கள் தாக்கிக் கொள்ளுவது மிகவும் வேதனையாக இருந்தது.

இவ்வாண்டு மிகவும் ஏமாற்றமளிக்கும் ஆண்டாக உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இருப்பினும், அவுஸ்திலேிய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 3-0 என வெற்றிபெற்றிருந்தோம். அது மறக்கமுடியாததொரு தருணம். 

அத்துடன் எமது அணியில் நல்ல திறமையானவர்கள் உள்ளனர். அவர்கள் ஒருநாள் தமது திறமைகளை கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு உதவிகள் தேவைப்படும்போது நாம் உதவிசெய்வதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம்.

குறிப்பாக கடந்த 1996 உலகக்கிண்ணத்தை வென்ற வீரர்கள் எப்பொழுதும் புகழையும் பெருமை வாய்ந்த அந்த நாட்களையும்  நினைப்பவர்கள். 

இறுதியில், இலங்கை அணியினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவிக்கவிரும்புகிறோம். கண்ணீர் நிறைந்த கண்களுடன் நாங்கள் செல்கிறோம்.

எமது அணி வீரர்களிடத்தில் நம்பிக்கை வைக்குமாறு இலங்கை ரசிகர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவர்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிப்பார்கள்.

உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள் அத்துடன் உங்கள் ரசிகர்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் இறுதிவரை உங்களுடன் இருப்பார்கள் என எமது வீரர்களுக்கு தெரிவிக்கின்றோம்.

ஒரு தேசம் ஒரு அணியென்ற தொலைநோக்குடன் வெற்றிபெறுவோமென நம்புகின்றோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சனத் ஜெயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக்குழு பதவி விலகியுள்ளது.

தங்களது பதவிவிலகலுக்கான கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் அடைந்துவரும் மோசமான படுதோல்விக்கு அணித் தெரிவும் ஒரு காரணம் என்று அண்மைக்காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா தலைமையிலான தெரிவுக்கு பதவிவிலகுவதற்கான தீர்மானத்திற்கு வந்துள்ளது.

அதன்படி தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய மற்றும் உறுப்பினர்களான ரஞ்சித் மதுருசிங்க, ரொமேஷ் களுவிதாரண, அசங்க குருசிங்க, எரிக் உபஷாந்த ஆகியோரே பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.