நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 

இந்த நல்லாட்சி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய கணக்காய்வு சட்டம் கால தாமதமாகியுள்ளமை தொடர்பில் தான் வருத்தமடைவதாகவும் தேசிய கணக்காய்வு சட்டத்தை அமுல்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நாட்டுக்கும் மக்களுக்கும் 66 ஆண்டுகளாக ஆற்றிய வரலாற்றுப் பணிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஊழலற்ற தூய்மையான அரசியல் இயக்கமாக கூட்டுணர்வுடன் கட்சியை கட்டியெழுப்புவதற்கான பரந்த அரசியல் செயற்திட்ட செய்தியை நாட்டுக்கு வழங்குவதற்காகவே செப்ரெம்பர் மூன்றாம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆண்டுவிழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

இன்று முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவன தலைவர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூட்டு அரசாங்கமே மோசமான நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு, நாடு முகம்கொடுத்த பல்வேறு சவால்களை வெற்றிகொண்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டுக்கும், மக்களுக்குமான பணியை ஆற்றுவதற்காக கூட்டரசாங்கத்தின் பயணத்தை பலப்படுத்துவதற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியையும் தூய்மையான, பலமான அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கும் தாம் பாடுபடுவதாக தெரிவித்தார்.

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் இன்றி செயற்படக்கூடிய அரசியல்வாதிகள் இருக்கும், தூய்மையான அரசியல் இயக்கமே இன்று நாட்டுக்கு தேவையாகுமென தெரிவித்த ஜனாதிபதி, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்டு நாட்டை முதன்மைப்படுத்தி, நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நாட்டில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்திய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிறுவுனர் பண்டாரநாயக்கா முகம் கொடுத்தது போன்றே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சி செயற்பாடுகளையும், நாட்டின் தலைவராக அரசாங்க செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் போது தாமும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, முன்னைய தலைவர்கள் நாட்டுக்கும், கட்சிக்கும் வழங்கிய தலைமை மற்றும் அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்ட முறைகளை ஆய்வு செய்து தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.