இலங்கை கிரிக்கெட் அணிக்கும் உலக கிரிக்கெட் அணிக்குமிடையில் இடம்பெறவுள்ள இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியை பிற்போட நேர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் வறட்சி, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த போட்டியை நடத்த இலங்கை கிரிக்கட் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

குறித்த இருபதுக்கு - 20 போட்டியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி  கொழும்பு ஆர் . பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே பிற்போடப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக இலங்கை அணி வீரர்கள் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் அவர்களுக்கு ஓய்வளிக்கும் முகமாக குறித்த போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.