நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சையின் இரசாயனவியல் பாடத்துக்கான வினாத் தாளினை பரீட்சையின் போது மாணவன் ஒருவன் ஊடாக பெற்றதுடன்     அம்மாணவனுக்கு  நவீன தொழில் நுட்பம் ஊடாக விடை சொல்லிக் கொடுத்த இரசாயனவியல் மேல திக வகுப்பு ஆசிரியர் நேற்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.  

சட்டத்தரணி சுரங்க ஜயவர்தன ஊடாக அவர்இவ்வாறு நேற்று கம்பஹா நீதிவான் டி.ஏ. ருவன் பத்திரன முன்னிலையில் சரணடைந்தார். இதன் போது  மேலதிக வகுப்பு ஆசிரியரான ஜினேந்திர ரணசிங்கவை  நாளை வரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை உயர் தரப் பரீட்சையின் இரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சைகள் இடம்பெற்றன. பகுதி 2 இற்கான  பரீட்சைகள் இவ்வாறு இடம்பெற்ற நிலையில் இரசாயனவியல் பகுதி 2 இன் மூன்று  கேள்விகளை உள்ளடக்கிய துன்டுப் பிரசுரங்கள் கம்பஹா பகுதியில் பெண்கள் பாடசாலை ஒன்றுக்கு முன்பாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 

இம்முறை தாம் அனுமானித்த கேள்விகள் பரீட்சைக்கு வந்துள்ளதாகவும் எனவே வெற்றியை உறுதி செய்ய தமது தனியார் கல்வி நிறுவனத்தில் மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களை அழைக்கும் விதமாகவே இந்த துண்டுப் பிரசுரம் தயார் செய்யப்பட்டு பரீட்சையை எழுதிவிட்டு வெளியில் வந்த மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்ப்ட்டிருந்த மூன்று வினாக்கள் அப்படியே பரீட்சை வினாத்தாளில் இருந்ததை அவதானித்துள்ள மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் வினா பத்திரம் ஏற்கனவே வெளியாகிவிட்டதா என்ற சந்தேகம் எழ அது தொடர்பில் பெற்றோர் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இந் நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் விடயத்தை பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ள நிலையில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந் நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை நடாத்திய பொலிஸார் நேற்று குறித்த துண்டுப் பிரசுரத்தை விநியோகித்ததாக கூறப்படும் கந்தான, பட்டகம பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று கைது செய்தனர். 67 வயதான நபர் ஒருவரையும் அவரது 29 வயதான மகன் மற்றும் 42 வயதான அச்சக உரிமையாளர் ஆகியோரைக் கைது செய்தனர். இதனையடுத்து மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டன. குற்றப் புலனாயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் நேர்டை கட்டுப்படடில் பிரதிப் பணிப்பாளர் சானி அபேசேகரவின் வழி நடத்தலில்  மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பின் பிரபல பாடசாலை மாணவனான பொலிஸ் வைத்தியசாலை வைத்தியரின்  மகன், பரீட்சைக்கு செல்லும் போது பரீட்சை வினாத்தாளை ஸ்கேன் செய்யத்தக்க நவீன ஒருவகை கருவியையும், காதில் புளூடூத் உடன் கூடிய கருவி ஒன்றினையும் எடுத்து சென்றுள்ளார். ஏற்கனவே இது திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அம்மாணவன் நவீன கருவியைப் பயன்படுத்தி, வினாத்தாளை மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு  மெசஞ்ஞர்  ஊடாக அனுப்பியுள்ளார். அதற்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் விடையினை அம்மாணவன் எழுதியுள்ளான். இது தொடர்பில் ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபா ஏற்கனவே வழங்கப்ப்ட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

  இந் நிலையிலேயே இது தொடர்பில் மாணவன், அவரது தந்தையான வைத்தியர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்து 30 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைத்துள்ள நிலையிலேயே நேற்று தேடப்பட்டு வந்த ஆசிரியர்  நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இதனையடுத்தே அவரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது