(ந.ஜெகதீஸ்)

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்ச வெப்பநிலையை கொடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் வடக்கில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது,

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது. இதனால் நேரடியான வெப்பநிலை இலங்கைக்கு கிடைக்கப்பெறும். அதனடிப்படையில் இன்று நாவலடி, சாலை, பெரிய பரந்தன் ஆகிய இடங்களில் நண்பகல் 12.12 ற்கு சூரியன் உச்ச வெப்பநிலையை வழங்கியிருந்தது. 

இதேவேளை நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை சற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேல், சப்ரகமுவ,மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யும். 

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யலாம்.                   

இடையிடையே நாட்டை ஊடறுத்து குறிப்பாக வடக்கு, வடமத்திய. வடமேல், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், மாத்தறை,ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றராக அமைந்திருக்கும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.