அபூர்வ பாலைவன பறவையினமான, ஹுபாரா பஸ்டார்டை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நீக்கியது.

இந்த ஹுபாரா பஸ்டார்ட் (வேகமாய் ஓடக்கூடிய உயரமான ஒரு பறவை) பறவையை வேட்டையாடுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து பாகிஸ்தான அரசு மனுச் செய்திருந்தது.

இந்தத் தடை எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளுடன் பாகிஸ்தானின் உறவுகளைப் பாதிக்கும் என்று அது வாதாடியது.

இந்தப் பறவையின் இறைச்சி காம உணர்வுகளை அதிகரிக்கும் என்று கருதப்படுவதால் இதனை வேட்டையாட அரபு நாட்டு ஷேக்குகள் வேட்டையாடும் நோக்கில் பாகிஸ்தான் வருவது வழக்கம்.

இந்த வேட்டைகளுக்காக, வளைகுடா நாடுகளின் அரச குடும்ப ஷேக்குகளை அழைப்பது என்பது பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு தூண் என்று அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.

இன்று உச்சநீதிமன்றத்தில் 4-1 என்ற பெரும்பான்மையில் இந்த வழக்கில் இந்தப் பறவையை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று, இந்தப் பறவை முற்றிலும் அழிந்துவிடாத அளவுக்கு வேட்டையாடலாம் என்று அனுமதித்து உள்ளது.