தற்போதைய நிலையில் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை குழப்புவதற்கு தீயசக்திகள் முயல்கின்றன.  நல்லாட்சி அரசாங்கம் ஐந்து வருடங்கள் தனது ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்யும். அரசாங்கத்தின் மக்கள் பணியும் தொடரும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொது எதிரணியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நேற்று நடத்தினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக பொதுஎதிரணியினர் வாக்களித்துள்ளனர். இந்த செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். 52 வீதமான பெண்கள் இந்த நாட்டில் உள்ள நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை முழுமையாக நிராகரிக்கும் வகையில் இந்த 43 பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டுள்ளனர். 

இந்த நாட்டில் கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கிய துறைகளில் பிரச்சினைகள் உள்ள நிலையில் நாம் அதனை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை தடுக்க இவர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வருகின்றனர். 

அமைச்சர் ராஜித  சேனாரத்னவிற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை கூட எத்தனையோ நல்ல விடயங்களை தடுக்க முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம். தேவையில்லா பிரச்சினைகளை கொண்டுவந்து நாட்டினையும் நல்லாட்சியையும் குழப்புவதற்கு இவர்கள்  செயற்பட்டு வருகின்றனர். 

ஆகவே வடக்கு, கிழக்கு, மலையக மற்றும் தெற்கு வாழ் அனைத்துப் பெண்களும் இந்த நபர்களை நிராகரிக்க வேண்டும். எந்த மாவட்டத்தில் இவர்கள் போட்டியிட்டாலும் அவர்களை எமது பெண்கள் நிராகரிக்க வேண்டும். இவர்களில் எவராவது பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் அவரை நிராகரிக்க வேண்டியது அவசியமாகும். உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. தற்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒன்றிணைந்து பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துள்ளனர். இந்த அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. இதனை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 

பாகிஸ்தான், மலேசியா, சுவிட்ஸர்லாந்து, பிரித்தானியா, கனடா உட்பட உலக நாடுகளிலுள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒப்பிடும்போது நாம் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். எமது பெண்களின் பிரதிநிதித்துவத்தை நிராகரிக்கும் வகையில் எமது அரசியல் வரலாறுகள் உள்ளன. இப்போது நாம் அதைனை மாற்றியுள்ளோம். பெண்களின் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும். 

நல்லாட்சி அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் தனது கடமையினை நிறைவேற்றும் மக்களின் பணிகளை செய்யும். அதற்கும் அப்பால் அடுத்த அரசாங்கமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமையும். இதில் எமது பெண்களின் பங்களிப்பு முழுமையாக இருக்கும். அதற்கு எமது பெண்கள் உதவ வேண்டும். சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் லக் ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பௌத்த தேரர்களைக் கொண்டு போராட்டத்தை நடத்தி அதனைத் தடுத்து நிறுவத்தினர். ஆனால் தற்போது நல்லாட்சி காலத்தில் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. 

வெளிநாடுகளால் மதிக்கக் கூடிய தலைவராக எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திகழ்ந்து வருகிறார். அவரது தலைமையில் எமது ஆட்சி தொடரும் என்றார்.