சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள  நம் பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்ள முடியாது. அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும்  இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரி வித்தார். 

அதேபோன்று  முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக  நம் பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வந்திருந்தாலும் அதுவும் தோற்கடிக்கப் பட்டிருக்கும் என்றும் அவர்  குறிப்பிட்டார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில் லாப் பிரேரணை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே  டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர்  இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:-

சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்விதமான வலிமையான காரணங்களையும் நாங்கள் காணவில்லை.  நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணங்கள் சரியானதாக தெரியவில்லை.   அவர்  தனது அமைச்சு செயற்பாடுகளை சரியாக முன்னெடுப்பதாகவே தெரிகிறது.  எனவே அவருக்கு  எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை   வெற்றியடையாது. அது  தோற்கடிக்கப்படும்.   இதுவே யதார்த்தமாகும்.  

இதேவேளை  சில  தினங்களுக்கு முன்னர்  முன்னாள் அமைச்சர்  விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முயற்சி செய்தனர்.  ஆனால் அந்த  முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.  அவ்வாறு  விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக   நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தால் நிச்சயம் அதுவும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் இதனை என்னால் உறுதியாக கூறமுடியும். காரணம்  அதன்போது சில விடயங்களை உணர்ந்துகொண்டிருந்தோம். விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறி கருத்து வெளியிட்டிருந்தார். அவருக்கு எதிராக மஞ்சள் அட்டையைக் காட்டியிருக்கலாம். சிகப்பு அட்டையை காட்டியிருக்கவேண்டிய அவசியமில்லை என்றே  நாங்கள் கருதுகிறோம். 

அதேபோன்று  முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக  நம்பிக்கை இல்லாப் பிரேரணை  கொண்டுவரப்பட்டிருந்தது அந்தப் பிரேரணை வாக்கெடுப்பிற்கு வந்திருந்தால்  அது  வெற்றியடைந்திருக்கும்.  அவ்வாறான நிலைமையே அன்று காணப்பட்டது.  ஆனால் அதனை  வாக்கெடுப்பிற்கு எடுக்கவில்லை.  நம்பிக்கையில்லாப் பிரேரணை  என்பதை  நானும் எனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்திருக்கின்றேன்.  அதன்படி பார்க்கும் போது அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயம் தோற்கடிக்கப்படும்.